அதிகரித்து வரும் புற்றுநோய் 5.45 கோடி பேருக்கு பரிசோதனை
அதிகரித்து வரும் புற்றுநோய் 5.45 கோடி பேருக்கு பரிசோதனை
ADDED : பிப் 04, 2025 11:51 PM
சென்னை:மாநிலம் முழுதும், 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க, மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில், 30 வயதை கடந்த பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை திட்டம், சோதனை முயற்சியாக ராணிப்பேட்டை, திருப்பத்துார், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், 2023ல் துவங்கப்பட்டது.
பின், 18 வயதை கடந்த இரு பாலருக்கும், வாய் புற்றுநோய் பரிசோதனை நடந்து வருகிறது.
அதன்படி, 19 லட்சம் பெண்கள் உட்பட 52 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுதும் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
அழைப்பு
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:
அனைத்து மாவட்டங்களிலும், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் வாயிலாக, 18 வயதை கடந்தவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு கடிதம் வழங்கப்படும். அவர்கள், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், வாய் புற்றுநோய் ஆகியவை கண்டறியும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
மருத்துவ பரிசோதனைக்கு வராதவர்களையும் கண்டறிந்து, பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதற்காக, சம்பந்தப்பட்ட நர்ஸ்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் பயிற்சி பெற்ற நர்ஸ்கள் உள்ளனர்.
தேவைப்பட்டால், கூடுதல் எண்ணிக்கையில் நர்ஸ்கள் நியமிக்கப்படுவர். மாநிலம் முழுதும், 18 வயதை நிரம்பிய, 5.45 கோடி ஆண்கள், பெண்களுக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
குணப்படுத்த முடியும்
மேலும், 30 வயதை கடந்த 1.88 கோடி பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் பூரணமாக குணப்படுத்த முடியும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்தை மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.