sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரும் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு: ராமதாஸ்

/

வரும் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு: ராமதாஸ்

வரும் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு: ராமதாஸ்

வரும் தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வு: ராமதாஸ்


UPDATED : ஜூலை 09, 2025 11:05 AM

ADDED : ஜூலை 09, 2025 02:00 AM

Google News

UPDATED : ஜூலை 09, 2025 11:05 AM ADDED : ஜூலை 09, 2025 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: “சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களுக்கான ஏ மற்றும் பி படிவங்கள் என எதிலும் கையெழுத்து போடும் அதிகாரம் எனக்குதான் உள்ளது,” என பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிர்வாகிகளை நீக்குவது, புதிய நிர்வாகிகளை நியமிப்பது என அதிரடி நடவடிக்கைகளை ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார்.

திண்டிவனம் அருகே ஓமந்துாரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், எம்.எல்.ஏ,.க்கள் ஜி.கே.மணி, சேலம் அருள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அன்புமணியை நேரடியாகவும், மறைமுகமாவும் கண்டித்து நிர்வாகிகள் பேசியதை ராமதாஸ் ரசித்தார்.

விண்ணப்பம்


பின், கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

என்னையும், என் செயல்பாடுகளையும் மதிக்காமல், பொதுவெளியில் விமர்சித்துப் பேசுவோர் யாராக இருந்தாலும், அவர்களை கட்சியினர் கண்டுகொள்ள வேண்டாம்.

வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். அதற்கான அதிகாரம், செயற்குழு வாயிலாக எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை துவங்கி விட்டேன்.

வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பம் கொடுக்க ஆயத்தமாகுங்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களும், விண்ணப்பங்கள் கொடுக்கலாம். ஏ மற்றும் பி படிவங்கள் என எதிலும் கையெழுத்து போடும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது.

வேறு யாரும், எனக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று சொன்னால், யாரும் நம்ப வேண்டாம். கையெழுத்து போடுவது நான் மட்டும் தான்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் நமக்கே உள்ளன. ஆக., 10ல் நடக்கவிருக்கும் பூம்புகார் மகளிர் மாநாட்டில், 2 லட்சம் பேர் பங்கேற்பர். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

ராமதாசின் இந்த அதிரடி அறிவிப்பால், அன்புமணி ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.

அனைத்து அதிகாரமும் அன்புமணிக்கே!

ஓமந்துாரில் ராமதாஸ் கூட்டிய செயற்குழுவுக்கு போட்டியாக, சென்னை பனையூரில் பா.ம.க., அரசியல் தலைமைக்குழு கூட்டம், அக்கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்று நடந்தது. அதில், 'பா.ம.க.,வில் அனைத்து அதிகாரமும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கே உள்ளது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், வரும் 25ல் துவங்கும் அன்புமணியின் நடைபயணம், சட்டசபை தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. பா.ம.க., செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணிக்கு மட்டுமே உண்டு. அமைப்பு விதி 15ன்படி, கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றை பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தான், தலைமை ஏற்று நடத்த வேண்டும்
2. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி இல்லாமல், அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்ற பெயர்களில், எங்கெங்கோ நடக்கும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்திற்கும் முரணானவை
3. ஜூலை 25ல் துவங்கும் அன்புமணியின் நடைபயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பா.ம.க., நிர்வாகிகள் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.



செயற்குழுவில் ஸ்ரீ காந்திமதி


பா.ம.க., செயற்குழுவுக்காக போடப்பட்டிருந்த மேடையில், ராமதாசின் மூத்த மகளும், இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட முகுந்தனின் தாயாருமான ஸ்ரீ காந்திமதி அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.






      Dinamalar
      Follow us