கஞ்சா கருப்பு இதோடு நிறுத்த வேண்டும் * அமைச்சர் சுப்பிரமணியன் காட்டம்
கஞ்சா கருப்பு இதோடு நிறுத்த வேண்டும் * அமைச்சர் சுப்பிரமணியன் காட்டம்
ADDED : பிப் 12, 2025 08:05 PM
திருவள்ளூர்:''நடிகர் கஞ்சா கருப்பு சென்ற மருத்துவமனையில், மருத்துவர்கள் உள்ளே இருந்தனர். ஆனால், 'மருத்துவர்களே இல்லை; செத்துப்போன பிணத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்' என, நடிகர் கஞ்சா கருப்பு, சினிமா வசனம் பேசுவதுபோல பேசியுள்ளார். இந்த விவகாரத்தை அவர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கிளறினால் அவருக்குதான் பாதிப்பு,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி அகரமேல் துணை சுகாதார நிலையம், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றில், 4.28 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மருத்துவ சேவைகளின் துவக்க விழா நடந்தது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன் திட்டத்தை துவக்கி வைத்தார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
நடிகர் கஞ்சா கருப்பு, அவருடைய மகன் சிகிச்சைக்காக சென்ற நிலையில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் எல்லாம் உள்ளே இருந்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் இல்லை என பேட்டி அளித்துள்ளார். 'மருத்துவர்களே இல்லை; செத்துப்போன பிணத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்கள்' என, சினிமா வசனம் பேசுவதுபோல, பேசிவிட்டு சென்றுள்ளார்.
உடனடியாக, சென்னை மாநகராட்சி மேயர், சமூக வலைதளத்தின் வாயிலாக, 'எத்தனை மருத்துவர்கள், பணியாளர்கள் இருந்தனர். எத்தனை பேர் விடுமுறை' என்ற தகவலை சொல்லி இருக்கிறார். கஞ்சா கருப்பு, இதற்கு மேலும் கிளறினால் அவருக்குத்தான் பாதிப்பு.
அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை வந்திருப்பதால், அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

