ADDED : டிச 31, 2025 02:51 AM

- நமது நிருபர் -
'கஞ்சா கடத்துபவர்கள் மீதும், விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் சுப்பிரமணியன் முயற்சிப்பது வெட்கக்கேடு' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை வாயிலாக தெரிவிக்க, ''தேர்தல் நெருங்குவதால், பணியாளர்களின் உணர்வுகளை துாண்டி போராட்டத்திற்கு இழுக்கும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
'தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா நடமாட்டமே இல்லை' என்று, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேசி வருகிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.
முதல்வர் ஸ்டாலின் நடத்தும் நடைபயிற்சி 'ஷூட்டிங்' ஏற்பாட்டிலேயே அமைச்சர் தன் முழு நேரத்தையும் செலவிடுவதால், அவருக்கு உண்மை நிலை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால், திருத்தணியில், 17 வயது சிறுவர்கள் கஞ்சா போதையில், ஒரு வட மாநில இளைஞரை அரிவாளால் கடுமையாக வெட்டிய வீடியோவை, அமைச்சர் பொய் என்கிறாரா?
துாத்துக்குடியில் தி.மு.க., கவுன்சிலரின் மகன் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் கல்லுாரி மாணவர் விடுதிகளில், போலீசார் நடத்திய தொடர் சோதனையிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாணவர் விடுதிகள் வரை கஞ்சா விற்பனை ஊடுருவி இருப்பது, போதைப்பொருள் எவ்வளவு ஆழமாக பரவியுள்ளது என்பதற்கான நேரடி சாட்சி. கல்வி வளாகங்களே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும்போது, கஞ்சா புழக்கம் இல்லை என்று அமைச்சரே பேசுவது மக்களுக்கு செய்யும் துரோகம்.
கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி அடைந்த தி.மு.க., அரசு, இன்று உண்மையை மறைத்து தப்பிக்க முயல்கிறது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க, அமைச்சர் சுப்பிரமணியன் முயற்சிப்பது வெட்கக்கேடு. தொடர்ந்து இதே வேலையைத்தான் மற்ற அமைச்சர்களும் செய்கின்றனர். இனியாவது அமைச்சர் உண்மையை பேச வேண்டும். இதே போலத்தான், அரசு பணியாளர்கள் போராட்ட விவகாரத்திலும் உண்மையை மறைத்து வருகிறது தமிழக அரசு.
சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
இடைநிலை சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் பணிக்கு எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, 11 மாதத்திற்கான பணி ஆணை தான் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஊதியம், மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் அடிப்படையில், 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
சென்னைக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்து தருகிறோம் என, யாரோ ஒரு இடைத்தரகர் தவறாக வழிகாட்டி நேற்று முன்தினம் அழைத்து வந்துள்ளார்.
அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் பேசி ஆலோசனை வழங்கினார்.
தேர்தல் நெருங்குகிறது என்பதால், பணியாளர்களின் உணர்வுகளை துாண்டி விட்டு, போராட்டத்திற்கு வித்திடும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பணியாளர்கள், அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது. பான்பராக் போன்ற பொருட்கள், தமிழகத்தில் மட்டும் தான் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள், எங்கு விற்கிறது என்பதை கூறினால், கூறியவர்களின் பெயர்களை ரகசியமாக பாதுகாத்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.
அரசு எடுத்த நடவடிக்கைகளை மறைத்து விட்டு, இந்த ஆட்சியில் போதைப் பொருட்களால் குற்றம் அதிகரித்திருப்பதாக கூறுவது, முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது; துளியும் உண்மை இல்லாதது.

