த.வெ.க.,வினரை விலைக்கு வாங்க முடியாது: அமைச்சர் ஆனந்த்
த.வெ.க.,வினரை விலைக்கு வாங்க முடியாது: அமைச்சர் ஆனந்த்
ADDED : ஆக 20, 2026 01:36 AM
சென்னை: ''பணம் கொடுத்தாலும், த.வெ.க.,வினர் யாரும் எதிர் தரப்புக்கு செல்ல மாட்டார்கள்,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசிய தாவது:
கடந்த 28 ஆண்டுகளாக, முதல்வருடன் நெருங்கி பழகி வருகிறேன். சினிமாவில் மட்டும் தான், முதல்வர் விஜய் நடிப்பார்; வெளியில் நடிக்க தெரியாது. பெரிய ஸ்டார், முதல்வர் என்ற எண்ணம், அவருக்கு கிடையாது.
பெரிய தயாரிப்பாளர்களிடம் 10 நிமிடம் பேசும் அவர், சாதாரண நபர்களிடம், இரண்டு மணி நேரம் கூட பேசுவார்.
அவர் படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவர், ஒரு தொகுதியை குறிப்பிட்டு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார்.
ஆனால், 'அங்கே என் மாவட்ட செயலர் நீண்ட காலமாக உழைத்திருக்கிறார். அவருக்கு தான் சீட் தருவேன்' என, முதல்வர் விஜய் கூறி விட்டார்.
தற்போது, அந்த மாவட்டச் செயலர், எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். இந்த சபையில், 75 சதவீதம் பேர், ரசிகர் மன்றத்தில் இருந்து வந்தவர்கள் தான்.
எங்களிடம் இருப்பவர்களை, 2 கோடி ரூபாய் கொடுத்தாலும், நீங்கள் வாங்கிவிட முடியாது. யாரும் அந்த பக்கம் வர மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
