விரும்பிய சேனல்களை பார்க்க முடியவில்லையா? புது அறிவுரை வழங்குகிறது ஸ்டார் நிறுவனம்
விரும்பிய சேனல்களை பார்க்க முடியவில்லையா? புது அறிவுரை வழங்குகிறது ஸ்டார் நிறுவனம்
ADDED : அக் 24, 2024 01:51 AM
சென்னை:'டி.சி.சி.எல்., வி.கே, டிஜிட்டல், எஸ்.சி.வி., ஆப்ரேட்டர்கள், திடீரென தொகுப்பு மாற்றங்களை செய்துள்ளதால், தமிழக ஸ்டார் சேனல் பார்வையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கிய ஆப்ரேட்டர்களான, 'டி.சி.சி.எல்., வி.கே, டிஜிட்டல், எஸ்.சி.வி.,ஆகியவற்றின் தவறான தகவல்கள் மற்றும் நியாயமற்ற, ஒருதலைப்பட்சமான செயல்களால், தமிழக சந்தாதாரர்கள், ஸ்டார் விஜய், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் உட்பட, தங்களுக்கு பிடித்த ஸ்டார் சேனல்களை, காண முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த ஆப்ரேட்டர்களின், ஸ்டார் விஜய் மற்றும் பிற ஸ்டார் சேனல்களுக்கான விலை அதிகரித்துள்ளது என்ற தவறான கருத்து, வாடிக்கையாளர்களுக்கு எந்தவித முன்னறிவிப்போ அல்லது சந்தாதாரர்கள் கோரிக்கையோ இல்லாமல், தன்னிச்சையாக இந்த சேனல்களை, தங்கள் அடிப்படை தொகுப்பில் இருந்து நீக்குவதற்கு காரணமாக உள்ளது.
ஸ்டார் சேனலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்ற தவறான தகவல்களை கூறி, சில எம்.எஸ்.ஒ.,க்கள் ஒருதலைபட்சமாக பாக்கிய லட்சுமி, சிறகடிக்க ஆசை, ஆஹா கல்யாணம் போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை, சந்தாதாரர்கள் பார்க்கும் வாய்ப்பை சீர்குலைக்க முயன்றனர்.
இந்த திடீர் மாற்றம், நுகர்வோரை ஏமாற்றியதுடன், அவர்களின் பொழுதுபோக்கு தேவைகளை பறித்துள்ளது. பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் அக்.,1 க்கு முந்தைய நிலையை திரும்பப்பெற, உங்களின் ஆப்ரேட்டர்களை தொடர்பு கொள்ளவும்.
அவர்கள் உங்களுக்கு பிடித்த சேனல்களுக்கான வாய்ப்பை தரவில்லை என்றால், மாற்று ஆப்ரேட்டர்களுக்கு மாறுவதாக கூறுங்கள். 'டிஸ்னி ஸ்டார் நெட்வொர்க்' தமிழகத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்குவதை நோக்கமாக வைத்துஉள்ளது.
'டி.சி.சி.எல்., வி.கே., டிஜிட்டல் மற்றும் எஸ்.சி.வி.,' ஆகியவை கடந்த 9ம் தேதி 'டி.டி.எஸ்.ஏ.டி.,' அறிவுறுத்தலுக்கு இணங்க, அவர்களால் உருவாக்கிய நிலைமையை, விரைவாக சரிசெய்வர் என நம்புகிறோம்.
இதன் வாயிலாக சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்த ஸ்டார் சேனல்களை எந்த தாமதமுமின்றி கண்டு களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.