ADDED : மார் 22, 2024 03:54 AM

கே.ஜே.செல்வராஜ், கோத்தகிரி, நீலகிரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்தால், ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்' என, அக்கட்சி எம்.பி., ராகுல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதைக் கேட்கவே வருத்தமாக உள்ளது. 'பெண்களுக்கு பணம் மட்டுமே பாதுகாப்பு' என்று, அரசியல் தலைவர்கள் நெஞ்சில், ஸ்டிக்கர் போட்டு ஒட்டி வைத்துள்ளனர் போலும். போதும் இனி, இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகள்.
அரசியல்வாதிகள் அனைவரும் வசதி படைத்தவர்கள் என்பதற்காக, பாரத நாட்டுப் பெண்கள் எல்லாரும், பிச்சையெடுப்பவர்கள் என்று அர்த்தமல்ல; அந்தக் காலம் மலையேறி விட்டது.
இன்று ஆண்களுக்கு சமமாக பெண்களும், போட்டி போட்டு சம்பாதிக்கத் துவங்கி விட்டனர். அதையும் மீறி எங்கள் பெண்களுக்கு, அண்ணன், தம்பி, அப்பா, கணவன் என நிறைய பேர், பக்கபலமாக இருக்கிறோம்.
பிரச்னை அதுவல்ல! பட்டப்பகலில் கூட ஒரு பெண்ணால் இன்று, தனியாக வெளியில் நடமாட முடியவில்லை.
பாட்டி முதற்கொண்டு, பல் முளைக்காத பச்சிளம் பெண் குழந்தைகள் வரை பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். அரசியல் சட்டமும், வழக்கு - வாய்தா என்று, கைகட்டி அதை வேடிக்கை தான் பார்க்கிறதே தவிர, பெண்களைப் பாதுகாப்பதாய் இல்லை.
பெண்களின் வங்கிக் கணக்கே இல்லாவிட்டாலும் பரவாயில்லை... அவர்கள் தைரியமாக, தனியாக வெளியே சென்று, காய்கறி வாங்கி வரும் அளவிற்காவது பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்; அது போதும்!
அத்தனை அரசியல் கட்சிகளும், மாங்கு மாங்கு என்று, பணம் தந்து வாயடைப்பதிலேயே உறுதியாக இருக்கின்றனவே தவிர, 'பெண்கள் பாதுகாப்புடன் நடமாட நாங்கள் அரணாக இருப்போம்' என்ற வாக்குறுதி கொடுக்கிறதா... இல்லையே?

