கார் தொழிற்சாலை கட்டுமானம்; அனுமதி கேட்கும் 'டாடா மோட்டார்ஸ்'
கார் தொழிற்சாலை கட்டுமானம்; அனுமதி கேட்கும் 'டாடா மோட்டார்ஸ்'
ADDED : டிச 23, 2024 05:12 AM

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில், கார் தொழிற்சாலை கட்டுமான பணிக்கு, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரி, 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
டாடா குழுமத்தை சேர்ந்த, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், 470 ஏக்கரில், 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உள்ளது.
முதல்கட்டமாக, 914 கோடி ரூபாயில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம், அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்த தொழிற்சாலைக்கு, முதல்வர் ஸ்டாலின் செப்டம்பரில் அடிக்கல் நாட்டினார். ஆலையில், 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்த ஆலை ஆண்டுக்கு, 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் உடைதாக அமைய உள்ளது. 'ஜாகுவார் லேண்ட் ரோவர்' கார்கள் உற்பத்தி அதிகம் இருக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.