ADDED : செப் 01, 2025 11:17 AM

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே பழுதாகி நின்ற அரசு பஸ் மீது, அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து - ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தென்காசி ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கார் டிரைவர் ஜோசப். தென்காசியில் திருமண நிகழ்ச்சி ஒன்றை முடித்து நேற்று மாலை வேகனார் காரில் சென்னை கிளம்பினார்.
காரில் ஆலங்குளத்தை சேர்ந்த செல்வகுமார் அவரது மனைவி யசோதா இவர்களது ஒன்றரை வயது குழந்தை அனோனியா மற்றும் இவர்களது நண்பர் விஜயபாபு சென்றனர்.
நள்ளிரவு 2 மணி அளவில் திருச்சி சிறுகனூர் அடுத்து நெடுங்கூர் பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கே திருச்சியில் இருந்து கள்ளக்குறிச்சி சென்ற அரசு பஸ் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதை கவனிக்காமல் ஜோசப் ஓட்டி வந்த கார் பஸ்சின் பின்னால் அதிவேகமாக மோதியது.
கார் அப்பளம் போல் நொறுங்கி உள்ளே இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
யசோதா, குழந்தை அனோனியா, விஜயபாபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த மற்ற இருவரையும் சிறுகனூர் போலீசார் போராடி மீட்டனர். இருவரும் படுகாயத்துடன் அட்மிட் செய்யப்பட்டனர். டிஎஸ்பி தினேஷ்குமார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பஸ் நிறுத்தப்பட்டு இருந்ததற்கான எச்சரிக்கை சிக்னல் வைக்கவில்லை என கூறப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடக்கிறது.