பி.ஐ.எஸ்., சான்றில்லா பொருட்கள் விற்ற அமேசான், பிளிப்கார்ட் மீது விரைவில் வழக்கு
பி.ஐ.எஸ்., சான்றில்லா பொருட்கள் விற்ற அமேசான், பிளிப்கார்ட் மீது விரைவில் வழக்கு
ADDED : மார் 22, 2025 05:14 AM

சென்னை : ''பி.ஐ.எஸ்., தர சான்றிதழ் இல்லாத பொருட்களை விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பபடும்,'' என, பி.ஐ.எஸ்., சென்னை கிளைத் தலைவர் பவானி தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் கிடங்குகளில், முறையாக சான்றளிக்கப்படாத பொருட்கள், விற்பனைக்கு வைத்திருப்பதாக, பி.ஐ.எஸ்., அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
3,376 பொருட்கள்
அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு சான்றளிக்கப்படாத மின்விசிறிகள், பொம்மைகள், தண்ணீர் பாட்டில்கள் என 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3,376 பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து, பி.ஐ.எஸ்., சென்னை கிளைத் தலைவர் பவானி கூறியதாவது:
நுகர்வோர் வாங்கும் பொருட்கள், தரமானதாக இருக்க வேண்டும். இதற்காக பி.ஐ.எஸ்., சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நுகர்வோர் பொருட்கள் வாங்கும்போது, தர நிர்ணயத்திற்கு வழங்கப்படும், ஐ.எஸ்.,ஐ, ஹால்மார்க், சி.ஆர்.எஸ்., போன்ற முத்திரைகள், முறையாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
முறையாக எந்த முத்திரையும் இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம். ஹெல்மெட், டயர், வீல், ரீம் போன்றவற்றுக்கும் முத்திரை அவசியம். இவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள, பி.ஐ.எஸ்., கேர் என்ற செயலி செயல்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக பொருட்களின் நம்பகத்தன்மையை அறிய முடியும். முத்திரையை யாராவது தவறாக பயன்படுத்தினாலும், இந்த செயலியில் புகார் அளிக்கலாம்.
தமிழகம் முழுதும், மாவட்டந்தோறும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த விதியை மீறும் விற்பனையாளர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விலையை விட, 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
13 இடங்களில் 'ரெய்டு'
அமேசான், பிளிப்கார்ட் என எந்த நிறுவனமும், சான்றளிக்கப்படாத மற்றும் முத்திரை இல்லாத பொருட்களை விற்பனை செய்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அடிப்படையில், அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், இந்திய தர நிர்ணய முத்திரை அவசியம்.
கடந்த 2023 - 24ம் ஆண்டில், தமிழகத்தில் மட்டும் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.புகார்கள் மற்றும் கூடுதல் விபரங்களை www.bis.gov.in என்ற இளையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.