ADDED : ஏப் 23, 2025 11:26 PM

சென்னை:நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மீது பதியபட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக, 2023ம் ஆண்டு கதலாழை கிராமத்தில் உள்ள விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நெற்பயிரை அழித்ததை எதிர்த்து, பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில், 2,000க்கும் மேற்பட்டோர், என்.எல்.சி., அலுவலக நுழைவு வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தென்குத்து வி.ஏ.ஓ., கோபாலகிருஷ்ணன் அளித்த புகார் அடிப்படையில், நெய்வேலி டவுன் போலீசார், அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அன்புமணி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

