ADDED : ஜூலை 03, 2025 03:59 AM
திருப்பூர்: பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை:
கடந்த ஜூன் 22ம் தேதி மதுரையில் பல லட்சக்கணக்கான முருக பக்தர்கள் பங்கேற்ற மாநாடு, தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஹிந்துக்கள் இதனால் அரசுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர்.
தி.மு.க., அரசு, மாநாட்டுக்கு அனுமதி அளிக்க மறுத்தது. கோர்ட்டில் வாதாடி, அனுமதி பெற்ற பின்பும், மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற வேண்டும் என, திடீர் நெருக்கடி கொடுத்தது. இறுதியில் மாநாடு மிகப் பெரிய எழுச்சியுடன் நடந்தது.
இதை பொறுத்து கொள்ள முடியாத தமிழக அரசு, காவல் துறையை ஏவி, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஏற்பாடு செய்த நிர்வாகிகள் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இது தி.மு.க., அரசின் அதிகார துஷ்பிரயோக போக்கை காட்டுகிறது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஹிந்து மக்கள் பக்தியோடு நெற்றியில் இடும் திலகத்தை தரக்குறைவாக பேசினார்.
இது தொடர்பாக கோர்ட்டே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியும், இன்றுவரை வழக்குபதிவு செய்யவில்லை. எம்.பி., ராஜா உட்பட பல தி.மு.க., தலைவர்கள் ஹிந்து மதத்தையும், பெண்களையும் அவதுாறாக பேசினர்.
அவர்கள் மீதெல்லாம் வழக்கு பதிவு செய்ய திராணியில்லாத காவல் துறை, ஆன்மிக மாநாட்டில் ஹிந்து ஒற்றுமைக்காக பேசிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது ஒரு தலைபட்சமானது.
தி.மு.க., அரசின் சர்வாதிகார போக்கை, ஹிந்து முன்னணி சட்டப்படி எதிர்கொள்ளும். பொய்யாக வழக்குப்பதிவு செய்து, ஹிந்து இயக்க தலைவர்களின் கருத்து சுதந்திரத்தை மிரட்டி, பறிக்க நினைக்கும், தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

