ADDED : ஜூலை 24, 2025 12:54 AM
சென்னை:தமிழக அரசு துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்களை, செய்தி ஊடகங்கள் வாயிலாக, சரியான நேரத்தில், பொது மக்களுக்கு எடுத்துரைக்கவும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைக்கவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோரை, அரசின் செய்தி தொடர்பாளர்களாக நியமித்து, கடந்த 14ல் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சத்தியகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில், 'முறையாக அரசாணை பிறப்பித்து, அரசிதழில் வெளியிடாமல், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, செய்தி தொடர்பாளர்களாக நியமித்தது, சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல. இதை, பத்திரிகை செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்தது, நிர்வாக அத்துமீறல்.
'அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமான தகவல்களை வெளியிடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக் குறிப்பை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.