ADDED : நவ 13, 2024 06:32 AM

சென்னை : முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வரும், முன்னாள் மேயருமான ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக, 2001ல் சி.பி.சி.ஐ.டி., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், கருணாநிதி, ஸ்டாலின், பொன்முடி, கோ.சி.மணி உள்ளிட்டோருக்கு எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவர்களுக்கு எதிரான வழக்குக்கு, 2005ல் சபாநாயகர் ஒப்புதல் வழங்கினார். 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர வழங்கிய ஒப்புதலை, சபாநாயகர் வாபஸ் பெற்றார்.
சட்டப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டால், பின் அதை ரத்து செய்யவோ, வாபஸ் பெறவோ, அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, வாபஸ் பெற்ற சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இருவருக்கும் எதிராக, சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், கடந்த ஏப்ரலில் விசாரணைக்கு வந்தது.
'சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, 15 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து, தற்போது வழக்கு தொடர முடியுமா' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பி இருந்தது.
இதுகுறித்து விளக்கம் அளிக்க, மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மனுவை திரும்பப் பெற அனுமதி கோரி, மனுதாரர் தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை திரும்பப் பெற அனுமதித்து, அதை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.