சமையலர் வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீது வழக்கு
சமையலர் வேலை வாங்கி தருவதாக ரூ.65 லட்சம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீது வழக்கு
ADDED : செப் 24, 2024 07:20 AM

சென்னை: சமையலர் வேலை வாங்கித் தருவதாக, 65 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தொடர்பாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
சேலம் அஸ்தம்பட்டி அருகேயுள்ள ஜான்சன்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி; கோரைப்பாய் நெசவு செய்யும் தொழிலாளி. முனுசாமிக்கு, சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியராக இருந்த வெங்கடேசன் கடந்த 2013ல் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அ.தி.மு.க., ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியனிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அமைச்சரின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள இரண்டு உண்டு உறைவிட பள்ளிகளுக்கு, 90,000 ரூபாய்க்கு முனுசாமியிடம் இருந்து கோரப்பாய் வாங்கப்பட்டுள்ளது.
முனுசாமியிடம், 'ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் பணிக்கு, 80 பேரை தேர்வு செய்ய உள்ளோம். சேலத்தில் மட்டும், 20 பேருக்கு பணியாணை வழங்க உள்ளேன். இப்பணிக்கு நேர்முக தேர்வு கிடையாது. தலா, 3 லட்சம் ரூபாய் தருபவர்களுக்கு சமையலர் பணி வழங்கப்படும்' என்று, சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இதை நம்பிய முனுசாமி, நண்பர்கள், உறவினர்களுக்கு சமையலர் வேலை வேண்டும் எனக்கோரி சுப்பிரமணியிடம், 65 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சுப்பிரமணியன், தன் மகள் லாவண்யாவிடம் கொடுத்துள்ளார்.
ஆனால், வேலை வாங்கி கொடுக்காமல் சுப்பிரமணியன் காலம் கடத்தி வந்துள்ளார். இவரிடம் படாதபாடுபட்டு, கொடுத்த பணத்தில் 23.50 லட்சம் ரூபாயை முனுசாமி திரும்ப வாங்கி உள்ளார். மீதி தொகையான, 41.50 லட்சம் ரூபாயை தருவதாக, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தோப்புக்கு முனுசாமியை வரவழைத்து, சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் லாவண்யா ஆகியோர் தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட போலீசில் முனுசாமி புகார் அளித்துள்ளார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கை, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனால், சுப்பிரமணியன், லாவண்யா மீது, வழக்குப்பதிந்த சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், விசாரணைக்கு இருவரும் ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
***