அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ரத்து
ADDED : நவ 28, 2025 06:49 AM

சென்னை: அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தி.மு.க., அரசு தடுக்க தவறி விட்டதாகக் கூறி, கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க., சார்பில், கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அவர்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.பி.முனுசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, கே.பி.முனுசாமி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

