நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு பரப்பியவர்கள் மீது வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி., பதில்
நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு பரப்பியவர்கள் மீது வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக டி.ஜி.பி., பதில்
ADDED : பிப் 02, 2026 03:18 AM

- நமது நிருபர் -
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதுாறு கருத்துகளை பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.ஜி.பி., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் முருகபெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனால், ஆவேசமடைந்த தி.மு.க., - காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது.
நோட்டீஸ்
இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதுாறு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.,வை சேர்ந்த வழக்கறிஞர் மணி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
மனுவை ஆராய்ந்த நீதிபதிகள், இதற்கு பதில் அளிக்க கேட்டு தமிழக அரசு, தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக டி.ஜி.பி., வெங்கட்ராமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் கள், அவதுாறு பரப்பியவர் கள் என அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.
கருத்து
உயர் நீதிமன்ற நீதிபதி மீது அவதுாறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்ட எஸ்.பி.,க்களுக் கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதுாறு கருத்துகளை பதிவிட்டவர்கள் குறித்த தகவல்களை கேட்டு பெருநகர சென்னை போலீசின் சைபர் குற்றவியல் பிரிவு சம்பந்தப்பட்ட சமூக ஊடக தலைமைக்கு கடிதம் அனுப்பியது. அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

