உதயநிதிக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
உதயநிதிக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி
ADDED : நவ 21, 2024 01:04 AM
சென்னை:துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக, ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் தாக்கல் செய்த மனு:
இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. 2018ல் துவங்கி, 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. படத்தின் நாயகனாக உதயநிதியும், நாயகிகளாக நடிகையர் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் நடிகர் யோகிபாபு நடித்துள்ளனர்.
இப்படத்துக்காக, 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் 'கால்ஷீட்' தராமல் புறக்கணித்து வரும் உதயநிதி, படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். இழப்பீடாக, 25 கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை நிராகரிக்குமாறு, உதயநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர், 2023 ஜூன் 14ல் வழக்கை தொடர்ந்துள்ளார். வழக்கு தொடர வரையறுக்கப்பட்ட காலத்தையும் கடந்து, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமற்ற முறையில் ஒப்பந்தம் என்று கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பிலும் உறுதி செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள், நீதிமன்ற விசாரணையின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. கால வரம்பை கடந்து, இந்த வழக்கு தொடரப்பட்டது என்பதை, உதயநிதி தரப்பு வாதங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
எனவே, வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி தாக்கல் செய்த மனு ஏற்கப்படுகிறது. ஓ.எஸ்.டி., பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

