ADDED : செப் 20, 2024 01:36 AM

பெங்களூரு: லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, 'நம்பர் 1 பயங்கரவாதி' என விமர்சித்த, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு மீது, பெங்களூரு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது சீக்கியர்கள் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை கூறி இருந்தார்.
இது குறித்து, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அளித்த பதிலில், 'முஸ்லிம்களை ராகுல் இரண்டாக பிரிக்க பார்த்தார்; அது நடக்கவில்லை. இப்போது சீக்கியர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். சீக்கியர்கள் பற்றிய அவரது கருத்தை பயங்கரவாதிகளும் ஆதரிக்கின்றனர். இதனால் ராகுல், நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி' என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் ரவ்னீத் சிங் பிட்டு மீது பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி நேற்று புகார் செய்தது. புகாரின்படி, ரவ்னீத் சிங் பிட்டு மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரவ்னீத் சிங் பிட்டு முன்பு காங்கிரசில் இருந்தவர். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர், அனந்தபூர் சாகிப் தொகுதியில் ஒரு முறையும், லுாதியானா தொகுதியில் இரண்டு முறையும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.,யாக இருந்தவர்.
காங்கிரசில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் லுாதியானா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆனாலும், அவரை ராஜ்யசபா எம்.பி., ஆக்கி, மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவியை, பா.ஜ., கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.