விஜயின் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு
விஜயின் பெரம்பூர் தொகுதி வெற்றியை எதிர்த்து வழக்கு
ADDED : ஜூன் 18, 2026 03:55 AM

சென்னை: முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன், புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் தொகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றியை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர், தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் சிவராஜ்; ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக, தொகுதி வாக்காளர் மருதுகணேஷ்.
திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற, த.வெ.க., - எம்.எல்.ஏ., நவல்பட்டு விஜியின் வெற்றியை எதிர்த்து, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்.
மொடக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற, த.வெ.க., எம்.எல்.ஏ., சண்முகத்தின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் பெரியசாமி ஆகியோர், தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல், திருமயம் தொகுதியில் வெற்றி பெற்ற, தி.மு.க., எம்.எல்.ஏ., ரகுபதி வெற்றியை எதிர்த்து, த.வெ.க., வேட்பாளர் சிந்தாமணி; மானாமதுரை தொகுதியில் வெற்றி பெற்ற, த.வெ.க., எம்.எல்.ஏ., இளங்கோவனுக்கு எதிராக, தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசி.
மயிலம் தொகுதியில் அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் குணசேகரன் ஆகியோர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
புதுச்சேரியில், காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற, லட்சிய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ.,ஜோஸ் சார்லஸ் மார்டின் வெற்றியை எதிர்த்து, தொகுதி வாக்காளர் விஸ்வநாதன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
முறைகேடுகள் செய்து, தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் வெற்றியை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என, மனுக்களில் தெரிவித்துள்ளனர்.
