மதுரை சிறையில் ஊழல் முறைகேடு எஸ்.பி., உட்பட 11 பேர் மீது வழக்கு
மதுரை சிறையில் ஊழல் முறைகேடு எஸ்.பி., உட்பட 11 பேர் மீது வழக்கு
ADDED : டிச 15, 2024 10:08 AM
மதுரை: மதுரை மத்திய சிறையில் நடக்கும் தொழில்களுக்கு மூலப்பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், முந்தைய கண்காணிப்பாளர் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சிறையில் கைதிகளை கொண்டு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர்கள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2016 முதல் 2021 வரை கண்காணிப்பாளராக ஊர்மிளா இருந்தார். தற்போது இவர் கடலுார் சிறை கண்காணிப்பாளராக உள்ளார்.
இவரது பணிகாலத்தில் 2019 முதல், 2021 வரை உற்பத்திக்கான மூலப்பொருட்களை சென்னை வெங்கடேஸ்வரா டிரேடிங், எஸ்.எஸ். டிரேடர்ஸ், சாந்தி டிரேடர்ஸ், ஜெனரல் டிரேடிங் நிறுவனம், தனலட்சுமி எண்டர்பிரைசஸ், ஜே.கே. வர்த்தகர்கள் மூலம் பெறப்பட்டன.
இதில் சில நிறுவனங்கள், பொருட்களை வழங்கியது போல, போலியாக பில்கள் தயாரித்து சிறை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளன. இதன்மூலம் 1.63 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடக்கிறது. நாளை, விசாரணை நடக்கும் நிலையில் ஊர்மிளா உட்பட 11 பேர் மீது மதுரை லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.