ADDED : ஜன 24, 2025 08:18 PM
தன் வீட்டு முன், அனுமதியின்றி உருட்டு கட்டைகளுடன் ஆட்களை நிறுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட, 150 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஈ.வெ.ரா., குறித்து சில கருத்துக்களை வெளியிட்டதற்காக, சீமானுக்கு த.பெ.தி.க., உள்ளிட்ட அமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள், இரு தினங்களுக்கு முன், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவரது உருவ பொம்மையை கொளுத்தினர்.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சியினரும், சீமான் வீட்டு முன் உருட்டு கட்டைகளுடன் நின்றனர். அவர்களை கலவரத்தை துாண்டும் வகையில், சீமான் நிறுத்தியதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக, த.பெ.தி.க.,வினர் உட்பட, 878 பேர் மீது, நீலாங்கரை போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், அனுமதியின்றி தன் வீட்டு முன் உருட்டுக் கட்டைகளுடன் ஆட்களை திரட்டியதற்காக, சீமான் உட்பட அவரது கட்சியினர், 150 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

