ஆள்மாறாட்டம் செய்து 2 ஏக்கர் மோசடி; சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
ஆள்மாறாட்டம் செய்து 2 ஏக்கர் மோசடி; சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
ADDED : நவ 19, 2024 06:21 AM
தேனி: தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து, போலி ஆவணங்கள் தயாரித்து கிரையம்பதிவு செய்த சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த ஜெயக்கொடி மனைவி பார்வதி. இவருக்கு சொந்தமாக போடி சங்கராபுரத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பாலார்பட்டி பெரியகருப்பன், சங்கராபுரம் கணேசன் இணைந்து, பார்வதி என்ற பெயரில் வேறொரு பெண்ணை தேவாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 2000 நவ.27ல் அழைத்துச் சென்றனர். அங்கு பெரியகருப்பனுக்கு பார்வதி நிலத்தை கிரையம் செய்து பத்திரப்பதிவு செய்தனர்.
அதன் பின் போடி சங்கராபுரம் கணேசனுக்கு பெரியகருப்பன் கிரையம் பெற்றதில் இருந்து 1 ஏக்கர் 89 சென்ட் நிலத்தை கிரையம் முடித்து கொடுத்தார்.
இந்த நிலத்தை அதன்பின் திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பாண்டியராஜன், சென்னை தேனாம்பேட்டை வரதராஜபுரம் ஜீவா, தேவாரம் ஐயப்பன் கோயில் தெரு செந்தில்குமார், சின்னமனுார் ரமேஷ் ஆகியோர் நிலத்தை வாங்கினர். இந்த போலி பதிவுகளை தேவாரம் சார்பதிவாளர் கண்காணிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட கோவை பார்வதி, தேவாரம் சார்பதிவாளர் உட்பட6 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., பாஸ்கரன் ஆகியோர் தேவாரம் சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

