தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கோவையில் 923 பேர் மீது வழக்கு
தடையை மீறி ஊர்வலம் சென்றதாக கோவையில் 923 பேர் மீது வழக்கு
ADDED : டிச 22, 2024 02:00 AM
கோவை: கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதிகளுக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர், நேற்று முன்தினம் கருப்பு தின பேரணி அறிவித்தனர்.
கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில், கருப்பு தின கண்டன உரைக்குப் பின், ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், எம்.எல்.ஏ., வானதி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் என, 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரணியாக செல்ல முயன்றபோது, தடையை மீறி பேரணி நடத்தியதாக, அண்ணாமலை உட்பட பலரையும் கைது செய்த போலீசார், அவர்களை அருகில் உள்ள மண்டபங்களுக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். பின், இரவில் அவர்களை விடுவித்தனர்.
இந்நிலையில், தடையை மீறி பேரணி நடத்தியதாக, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது, கோவை காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பேரணியில் பங்கேற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர் என, 923 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், எந்த அமைப்பையும் சேராத பொது மக்களும் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறின.