ADDED : பிப் 07, 2025 04:05 AM
மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது உட்பட 4 பிரிவுகளின்கீழ் பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையை காக்க பிப்.4ல் ஹிந்து முன்னணி அறப்போராட்டம் அறிவித்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கருதி மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. எச்.ராஜா உள்ளிட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடந்த வழக்கில் மதுரை பழங்காநத்தத்தில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் பழங்காநத்தத்தில் குவிந்தனர்.
காரைக்குடியில் இருந்து உடனடியாக பழங்காநத்தம் வந்த எச்.ராஜா 6 நிமிடங்கள் பேசினார். அதில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தி.மு.க., அரசை கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் தாங்களாக முன்வந்து மதக்கலவரத்தை துாண்டும் வகையில் பேசியது, பகைமையை ஏற்படுத்தும் வகையில் பேசியது, பொது அமைதி, ஒழுக்கத்தை பாதிக்கும் வகையில் பேசியது, நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பேசியது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

