ADDED : ஆக 07, 2025 02:03 AM

திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியர் கவின் என்ற வாலிபர், கடந்த 27ல், நெல்லை கே.டி.சி. நகரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் கே.டி.சி. நகரை சேர்ந்த பட்டாலியன் போலீஸ் எஸ்.ஐ., சரவணன், மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன், கவின் படுகொலையை கண்டித்து, திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதில் பேசிய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம், ''ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆங்கிலேயர்கள் ஓட்டு அரசியல் செய்யாததால், கடும் சட்டங்களைக் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது ஓட்டு அரசியல் செய்வதால் குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை,'' என பேசினார்.
பொது இடத்தில் மற்ற சமூகத்தினரை தாக்கி பேசியது தொடர்பாக, ஷ்யாம் மீது நடவடிக்கை எடுக்க சில அமைப்புகள் வலியுறுத்தின. நெல்லை ஜங்ஷன் போலீஸ் எஸ்.ஐ., கோலப்பன் புகாரின் பேரில், ஷ்யாம் மற்றும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.