மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மேலுார் வரை நீட்டிக்க வழக்கு
மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மேலுார் வரை நீட்டிக்க வழக்கு
ADDED : ஜன 29, 2025 05:10 AM
மதுரை : மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலுார் வரை நீட்டிக்க தாக்கலான வழக்கில் மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மேலுார் எட்டிமங்கலம் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 32 கி.மீ.,துாரம் மெட்ரோ ரெயில் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. திட்ட மதிப்பீடு ரூ.11 ஆயிரத்து 360 கோடி. இரண்டாம் கட்டத்தில் மதுரை விமான நிலையம் வரை இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
மேலுார் முதல் ஒத்தக்கடை வரை அதிக கிராமங்கள் உள்ளன. இப்பகுதி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மேலுார், கொட்டாம்பட்டி, கீழவளவு போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 2015 முதல் 2023 ஜூன் வரை 1195 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 386 பேர் இறந்துள்ளனர். 886 பேர் காயமடைந்துள்ளனர்.
மெட்ரோ ரயில் திட்டத்தை ஒத்தக்கடை முதல் மேலுார் வரை நீட்டிக்க வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர், தமிழக நிதித்துறை முதன்மைச் செயலர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. இம்மனு ஏற்புடையதல்ல. இருந்தபோதிலும் அதிகாரிகள் விரைவில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டது.