ADDED : ஜன 09, 2025 11:11 PM
மதுரை:அரசு போக்குவரத்து கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைக்க, தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டு உடைந்து விழுந்தது.
பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. சரியான நிர்வாகமின்மை, பராமரிப்பின்மை, ஊழலால் போக்குவரத்துக் கழகம் ரூ.48,458 கோடி இழப்பை சந்தித்துள்ளது. தரம் குறைந்த உதிரி பாகங்கள் கொள்முதல் மூலம் முறைகேடு நடக்கிறது. விபத்து வழக்குகளில் இழப்பீடு தொகையை செலுத்தாததால் 652 அரசு பஸ்கள் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாதந்தோறும் ரூ.12 கோடி ரூபாய் டோல்கேட் கட்டணமாக போக்குவரத்து கழகம் செலுத்துகிறது.
பிற மாநிலங்களில் போக்குவரத்துக் கழகங்கள் டோல்கேட், இன்சூரன்ஸ் கட்டணத்தை பயணியர் 'டிக்கெட்டு'களுடன் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் அந்நடைமுறையை பின்பற்றுவதில்லை.
இதனால் ஆண்டு தோறும் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் மோசமான நிலையில் உள்ளவற்றை சீரமைத்து இயக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, தமிழக போக்குவரத்துத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, பிப்., 20க்கு விசாரணையை ஒத்திவைத்தது.