சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ்களாக இயக்குவதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ்களாக இயக்குவதற்கு எதிராக வழக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 01, 2024 01:03 AM
மதுரை:சாதாரண பஸ்களை 'எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் இயக்கி அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை கோரிய வழக்கில், புகாரை விசாரித்து மனுதாரருக்கு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருச்சி முசிறி வழக்கறிஞர் ராஜேந்திரன் 2018ல் தாக்கல் செய்த மனு:
அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொலைதுார பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் இருக்கை வசதிகள் மோசமாக உள்ளன. முதலுதவி பெட்டிகள், வழித்தட வரைபடங்கள் இருப்பதில்லை. சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு பெயர்களில் இயக்குகின்றனர்.
அனைத்து ஸ்டாப்களிலும் பஸ்களை நிறுத்தி பயணியரை அழைத்துச் செல்கின்றனர். பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். வருவாய் ஈட்டும் நோக்கில் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்படுவதால், பயணியர் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், போக்குவரத்து துறை செயலருக்கு புகார் அனுப்பினேன். கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு:
நிச்சயமாக சட்டம், விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும். குறிப்பிட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஏற்கனவே அதிகாரிகளிடம் மனுதாரர் மனு அளித்துள்ளார். அதை பார்த்து விசாரித்து, மனுதாரருக்கு நான்கு மாதங்களில் பதிலளிக்க வேண்டும். அதைப் பொறுத்து மனுதாரர் மேல் நடவடிக்கையை தொடரலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.

