ரசிகரை துாக்கி வீசிய சம்பவம் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு
ரசிகரை துாக்கி வீசிய சம்பவம் நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு
ADDED : ஆக 28, 2025 01:19 AM
பெரம்பலுார்: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் குன்னம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், 24, மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது, நடைமேடையில் நடந்து வந்த விஜயை பார்த்த ஆர்வத்தில் நடைமேடையில் ஏறினார். இதைப் பார்த்த பாதுகாப்பு பவுன்சர்கள் இரண்டு பேர், விஜய் முன்னிலையில் சரத்குமாரை துாக்கி கீழே வீசினர்.
இதில் காயமடைந்த சரத்குமார், பெரம்பலுார் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று முன்தினம் தன் தாயுடன் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், 'நடிகர் விஜயை பார்க்கும் ஆர்வத்தில் தான், மதுரையில் நடைபெற்ற த.வெ.க., மாநாட்டுக்கு சென்றேன். அப்போது, மாநாட்டு மேடைக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் விஜய் நடந்து வந்தார்; ஆவலில், அந்த நடைமேடை மீது ஏறினேன்.
'உடனே, விஜயுடன் பாதுகாப்புக்கு வந்திருந்த பவுன்சர்கள் என்னை சூழ்ந்து கொண்டு, என்னை பிடித்து, மேடையில் இருந்து கீழே துாக்கி வீசினர். இதனால், என் நெஞ்சு, முதுகு பகுதிகளில் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. காயத்துடன் ஊருக்கு வந்த என்னை, பெரம்பலுார் பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தொடர்பு கொண்டனர்.
'இதை பெரிய பிரச்னையாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனரே தவிர, காயம் அடைந்த எனக்கு உதவி செய்ய, அவர்கள் தயாராக இல்லை. என்னை துாக்கி வீசும்போது, அனைத்தையும் அருகில் இருந்து விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு கொடுங்காயம் ஏற்படுத்திய விஜய் மற்றும் அவருடைய பவுன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., அலுவலக அதிகாரிகள், அதை குன்னம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில், நடிகர் விஜய் உள்ளிட்ட அவருடைய பவுன்சர்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், குன்னம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
பின்னர், இந்த சம்பவம் நடந்த இடம் மதுரை என்பதால், விஜய் உள்ளிட்டோர் மீதான வழக்கை, மதுரை போலீசாரின் விசாரணைக்கு மாற்றினர். தமிழக வெற்றிக் கழகம் துவங்கிய பின், அக்கட்சித் தலைவர் விஜய் மீது பதிவாகியுள்ள முதல் குற்ற வழக்கு இது.
இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக நடிகர் விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.