மதுரையில் மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு
மதுரையில் மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்குப்பதிவு
UPDATED : மார் 20, 2024 07:26 PM
ADDED : மார் 20, 2024 01:30 PM

மதுரை: கர்நாடக ஹோட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்திப் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா மீது  4 பிரிவுகளின் கீழ்  மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஷோபா, ‛ தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து எங்கள் கர்நாடகா ஹோட்டலில், வெடிகுண்டுகளை வைக்கின்றனர். எங்கள் மாநிலம் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை‛ என்றார்.
இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷோபா தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்தார்.
இந்நிலையில், தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபா மீது சட்டப்பிரிவு 153, 153(ஏ), 505 1(பி), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் உத்தரவு
இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையம் இன்று பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசிய ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகா தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

