விஷால் குறித்து அவதுாறு 'யுடியூபர்' மீது வழக்கு பதிவு
விஷால் குறித்து அவதுாறு 'யுடியூபர்' மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 24, 2025 12:38 AM
சென்னை:நடிகர் விஷால் குறித்து அவதுாறு பரப்பியதாக, இரண்டு யுடியூப் சேனல்கள் மற்றும் யுடியூபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான நாசர், 68, புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், சமீபத்தில் விஷால் நடித்த, மதகதராஜா திரைப்படம் வெளியானது. இப்பட வெளியீட்டு நிகழ்ச்சியின்போது, விஷால் மது மற்றும் மாதுக்கு அடிமையானதால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை, கால் நடுக்கம் ஏற்பட்டதாக, 'யுடியூப்' சேனல்களில் யுடியூபர் சேகுவாரா பேட்டி அளித்துள்ளார்.
இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பாகவும், அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்ளது. எனவே யுடியூபர் சேகுவாரா மீதும் பேட்டியை வெளியிட்ட 'யுடியூப்' சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
விசாரித்த தேனாம்பேட்டை போலீசார், யுடியூபர் சேகுவாரா மற்றும் கிங்ஸ் உட் நியூஸ், யூ தமிழ் உதாரப்பு ஆகிய இரண்டு யுடியூப் சேனல்கள் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

