திருச்செந்துார் கோயில் கட்டுமானத்திற்கு தடை கோரி வழக்கு
திருச்செந்துார் கோயில் கட்டுமானத்திற்கு தடை கோரி வழக்கு
ADDED : ஏப் 23, 2025 03:56 AM
மதுரை : திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விதிகளை மீறி புனரமைப்பு மற்றும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளுக்குரிய கட்டுமான பணி மேற்கொள்ளப்படுவதாகவும், தடை கோரியும் தாக்கலான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் புனரமைப்பு மற்றும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகளை நிறைவேற்ற கட்டுமான பணி 2022 முதல் நடைபெறுகிறது. இதற்கு கோயில் நிர்வாகம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது. அது கடலோர பகுதியிலுள்ள கோயில்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்திற்கு தேவையில்லை.
கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெறுவது அவசியம். ஆனால் அனுமதி பெற்றதாகக்கூறி கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. புகார்களின் அடிப்படையில் அத்துறையின் அதிகாரிகள் கட்டுமான பணியை 2024 ல் ஆய்வு செய்தனர். அதன் அறிக்கை 2025 ஜன.23 ல் வெளியானது. அதன்படி சில நிபந்தனைகளை கட்டுமான பணியில் நிறைவேற்றவில்லை.
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது குறித்து மக்கள் அறியும் வகையில் கோயிலின் இணையதளத்தில் வெளியிடவில்லை. திருச்செந்துார் நகராட்சியின் அறிவிப்பு பலகையிலும் இடம்பெறவில்லை. மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு தீர்வு காணவில்லை. கோபுரத்தை மறைக்கும் வகையில் விதிகளை மீறி உயரமாக கட்டடங்கள் கட்டப்படுகிறது.
சுற்றுச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்படாத நாழிக்கிணறு, வள்ளி குகை உள்ளிட்ட சில பகுதிகளில் கட்டுமானம் நடைபெறுகிறது. விதிகளை மீறி மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டும். நிபந்தனைகளை மீறியதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இதுபோல் நிலுவையிலுள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.