ADDED : ஜன 28, 2025 07:34 PM
மதுரை:திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, மாடு, கோழி பலிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
'திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மலையிலுள்ள அனைத்து பகுதிகளும் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானது' என ஆங்கிலேயர் ஆட்சியின்போதே நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக தன்னுடைய உத்தரவில் கூறியுள்ளது.
‛மலையை சிக்கந்தர் மலை; மலை முழுவதும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது; மலை மீது ஆடு, மாடு, கோழிகளை பலி கொடுப்போம்' எனக்கூறி ஆடுகளோடு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மத அடிப்படைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் துணை கமிஷனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு மனுவை விசாரித்தது.
இதுபோல, நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து, பிப்., 4ல் விசாரணைக்கு இவ்வழக்கை பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டது.

