தொழிற்சாலைகளுக்கு கொள்ளிடம் நீர் தடை கோரி வழக்கு; அரசுக்கு நோட்டீஸ்
தொழிற்சாலைகளுக்கு கொள்ளிடம் நீர் தடை கோரி வழக்கு; அரசுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 16, 2025 02:51 AM
மதுரை:திருச்சி அன்பில் கொள்ளிடம் ஆற்று நீரை தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க தடை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு நலச்சங்கம் தலைவர் சண்முகம் தாக்கல் செய்த பொதுநல மனு:அன்பில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் புதிய குடிநீர் திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குடிநீர் வடிகால் வாரியம், 'எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வேளாண் சார்ந்த தொழில்கள் போன்ற தனியாருக்கு தண்ணீர் வழங்கப்படும்' என தெரிவித்துள்ளது.
எனவே, அன்பில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து தொழிற்சாலைகள் மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு தண்ணீர் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
அரசு பிளீடர் திலக்குமார், “தொழிற்சாலை பயன்பாட்டிற்கு கொள்ளிடம் நீர் வழங்கப்பட மாட்டாது. குடிநீர் தேவைக்கு மட்டுமே வழங்கப்படும்,” என்றார்.
நீதிபதிகள், 'இதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.