பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரிய வழக்கு வாபஸ்
பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை கோரிய வழக்கு வாபஸ்
ADDED : ஜூன் 20, 2025 01:12 AM

சென்னை:  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை பயன்படுத்த, தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,'விடுதலைப் புலிகள் இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை, தன் அரசியல் ஆதாயங்களுக்காக, தேர்தல் பிரசாரங்களில், சீமான் பயன்படுத்தி வருகிறார். எனவே, பிரபாகரன் படத்தை பயன்படுத்த, சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு,  ''இந்த விவகாரம் தொடர்பாக, அரசுக்கு மனு அளித்த 15 நாட்களுக்குள், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அரசு தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க, கால அவகாசம் தர வேண்டாமா,'' என, கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

