ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டுதல் உருவாக்க கோரி வழக்கு
ADDED : டிச 03, 2024 12:29 AM

மதுரை, ஜல்லிக்கட்டிற்கு நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க தாக்கலான வழக்கில், மனுதாரர் அனுப்பிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
தைப்பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் ஜனவரியில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன. ஒரு சிலரின் ஒன்றுக்கு மேற்பட்ட காளைகள், 2024ல் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதனால், பிற காளைகளின் உரிமையாளர்களுக்கு வாய்ப்பு பறிபோனது.
மாடு பிடி வீரர்களை அனுமதிப்பது மற்றும் பரிசு வழங்குவதில் முரண்பாடும், பாகுபாடும் நிலவுகிறது. தனி நபராக வரும் வீரர்களை பங்கேற்கவிடாமல் தடுக்கின்றனர். சிலர் மட்டுமே அதிக காளைகளை அடக்கியதாக முதல் பரிசு பெறுகின்றனர்.
திறமையான பிற வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டிற்கு நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க வலியுறுத்தி, தமிழக வருவாய் துறை, கால்நடை துறை முதன்மை செயலர்கள், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பில், 'ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்பட்டு டோக்கன் வழங்கி, போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டது. பின், நீதிபதிகள், 'இந்த மனுவை அதிகாரிகள் மூன்று வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.