ADDED : ஜூலை 16, 2025 07:07 AM
புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு, பதில் அளிக்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான்தாக்கல் செய்த மனு:
வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடியபோது, காணாமல் போனது தெரிய வந்தது.
எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்தபோது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து, பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்பாக, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜூலை 22ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.