கோவை வெள்ளியங்கிரி மலையில் தங்கி பூஜை நடத்த அனுமதி கோரி வழக்கு
கோவை வெள்ளியங்கிரி மலையில் தங்கி பூஜை நடத்த அனுமதி கோரி வழக்கு
ADDED : ஜன 13, 2026 10:25 AM

சென்னை: வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவிலில், கார்த்திகை மாதம் துவங்கி, 48 நாட்களுக்கு, அங்கு தங்கி பூஜை செய்ய அனுமதி கோரி, கோவை முட்டத்துவயலை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் துவங்கி, 48 நாட்களுக்கு செம்மேடு மக்கள் வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவிலில் பூஜை செய்வது, பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வெள்ளியங்கிரி மலையில் பூஜை நடத்த அறநிலையத் துறை அனுமதி வழங்க மறுக்கிறது' என, தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் வாதாடியதாவது:
மகா சிவராத்திரிக்கு பின் பிப்ரவரி முதல் மே வரை, வெள்ளியங்கிரி மலையில் உள்ள கோவில் நடை திறக்கப்படும். அப்போது லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்துவர்.
ஜூன் முதல் ஜனவரி வரை வெள்ளியங்கிரி மலையில் கடும் குளிரும், மழையும் இருக்கும் என்பதால், அந்த காலகட்டத்தில் பொது மக்கள் யாருக்கும் மலையில் ஏறிச் சென்று சுவாமி வழிபாடு நடத்தவோ, பூஜைகள் செய்யவோ அனுமதி வழங்கப்படுவதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் மே வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மனுதாரர் கூறுவது போல கார்த்திகை மாதத்தில் அனுமதி வழங்கப்படுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்
இதையடுத்து நீதிபதி, 'மனுதாரர் தன் கோரிக்கை தொடர்பாக, கோவை இணை கமிஷனரிடம் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். அந்த மனு மீது அறநிலையத்துறை இணை கமிஷனர் மூன்று மாதங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

