அமைச்சர் பதவியில் பொன்முடி நீக்கக்கோரி வழக்கு: 24ல் விசாரணை வரும் 24ல் விசாரிக்கிறது ஐகோர்ட்
அமைச்சர் பதவியில் பொன்முடி நீக்கக்கோரி வழக்கு: 24ல் விசாரணை வரும் 24ல் விசாரிக்கிறது ஐகோர்ட்
ADDED : ஏப் 17, 2025 12:51 AM
சென்னை:சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு, 24ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.
சென்னையில், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடந்த கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, அச்சிட முடியாத வகையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
கண்டனம்
அவரது பேச்சுக்கு, ஹிந்து சமய ஆர்வலர்கள், அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, தி.மு.க., துணை பொதுச் செயலர் பதவியில் இருந்து, பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், பொன் முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துஉள்ளார்.
மனு விபரம்:
மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அவரின் பேச்சு, கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி, அவதுாறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.
பொது நிகழ்வில், அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, முதல்வரின் சகோதரியும், எம்.பி.,யுமான கனிமொழி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு, அமைச்சரான அவருக்கு உள்ளது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புகார்கள் அளிக்கப்பட்டும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதவி பிரமாணத்தை மீறிய பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை, அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கும்படி, மனுதாரர் தரப்பில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையிலான முதல் அமர்வு முன், முறையீடு செய்யப்பட்டது.
விளக்கம்
அப்போது, 'அமைச்சர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஊடகங்களில், இதுதொடர்பாக செய்தி வெளியாகி உள்ளது. தன் பேச்சுக்கு, அமைச்சர் வருத்தமும் தெரிவித்துள்ளார் அல்லவா' என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில், அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இதையடுத்து, வரும் 24ம் தேதிக்கு மனுவை விசாரிப்பதாக,தலைமை நீதிபதி தெரிவித்தார்.