ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருட்களில் அளவு குறைவு எடையை உறுதி செய்ய வழக்கு
ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருட்களில் அளவு குறைவு எடையை உறுதி செய்ய வழக்கு
ADDED : ஜூன் 27, 2025 12:27 AM
சென்னை:ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களில் அளவு குறைவதை தடுக்க, அவற்றை எடை போட்டு சரிபார்த்த பின் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனு:
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இணைப்பு
இதில், நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும், ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியும். இதற்காக, அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவிகள் உள்ளன.
இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில், உணவு பொருள் வினியோகத்தில் உள்ள குறைபாடுகளை களையவும், சரியான எடையில் பொருட்களை வழங்கவும், மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, தமிழக ரேஷன் கடைகளில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசுகளை இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய நடைமுறைப்படி, பொருட்கள் முதலில் அளவீடு செய்த பின், 'பில்' போடப்பட வேண்டும். இதன்படி, தினமும் 20 ரேஷன் கார்டுகளுக்கு மட்டுமே பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
பொருட்கள் எடை குறைவதை தடுக்க, இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. ஆனால், ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரும்போதே, ஒரு மூட்டைக்கு, ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை குறைவாகவே உள்ளது.
ஊதியம் இழப்பு
எந்தவொரு தவறும் செய்யாமல், ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை, இதற்காக இழந்து வருகின்றனர்.
அதனால், கடைகளுக்கு கொண்டு வரப்படும் உணவு பொருட்களையும், இதேபோல் எடைபோட்டு சரிபார்த்த பின்னர், விற்பனை கருவிகளில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதற்கு நான்கு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.