மேற்குத் தொடர்ச்சி மலை ஆறுகளை இணைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மேற்குத் தொடர்ச்சி மலை ஆறுகளை இணைக்க வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஏப் 08, 2025 04:12 AM

மதுரை: திருநெல்வேலி, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளை இணைத்து, அணைகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தாக்கல் செய்த பொதுநல மனு:
மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் கூடலுார் தேவாலா பகுதியில் 15 சிறிய ஆறுகள் ஓடுகின்றன. இங்கு ஜூன் முதல் அக்டோபர் பருவமழையின்போது 166 முதல் 188 டி.எம்.சி.,நீர் தமிழகத்தில் பயணம் செய்து, கேரள அரபிக்கடலில் வீணாக கலக்கிறது. அணைகள் அமைத்து நீரை சேமித்தால் கோவை, நீலகிரி மாவட்டங்கள் பயனடையும்.
கோவை மாவட்டத்தில் ஆனையாறு, இட்லியாறுகளை இணைத்தால் ஆழியாறு அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். ஈரோடு மணியாச்சியாறு பகுதியில் அணை கட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தவில்லை. திட்டத்தை செயல்படுத்தினால் வறட்டுப்பள்ளம் அணைக்கு நீர் வந்து, தோனிமருவாறு வழியாக மேட்டூர், பவானி, அந்தியூர் விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். திருநெல்வேலியில் கருப்பாநதி, செண்பகவள்ளி நதி, வலிமலையாறு, கோட்டையமலையாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக் கடலில் கலக்கிறது.
இவற்றில் தடுப்பணைகள் அமைத்தால் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை விவசாயிகள் பயனடைவர்.மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மேற்கண்ட ஆறுகளை இணைத்து, அணைகள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு: அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.