பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
பன்னீர் மீதான வழக்குகள்: ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : மார் 06, 2026 07:37 AM

சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிட்டார்.
அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தது, இரவு 10:00 மணிக்கு மேல் பட்டாசு வெடித்தது என பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய போலீஸ் நிலையங்களில், நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தன.
அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில், 'தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக, தகுதியான அதிகாரி புகார் அளிக்காமல், காவல் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில், காலதாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, நான்கு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்' என வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு எதிரான, நான்கு தேர்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

