பொங்கல் பரிசுடன் ரொக்கம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
பொங்கல் பரிசுடன் ரொக்கம்: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு
ADDED : ஜன 11, 2025 02:03 AM

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,000 ரூபாய் ரொக்கம் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, கடந்தாண்டு டிச., 28ல் அரசாரணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, 249 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவாகும் என, தமிழக அரசு அறிவித்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன், 2,000 ரூபாய் ரொக்கம் சேர்த்து வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன்தாஸ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜனவரி 3ல் தாக்கல் செய்யப்பட்ட இம்மனு, இதுவரை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி முறையீடு செய்தார்.
அப்போது, 'பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால், அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே, அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டும், வழக்கு பட்டியலிடப்படவில்லை' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 'இந்த மனுவில் அவசர வழக்காக விசாரிக்க, எந்த முகாந்திரமும் இல்லை என நிராகரித்த பின்னும், மீண்டும் நீங்கள் அவசர வழக்காக விசாரிக்க கோருவதை ஏற்க முடியாது. இதுபோன்று தொடர்ந்து முறையிட்டால், மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்படும்' என்று எச்சரித்தார்.