அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்திய கேஷியர்
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் நிதியை சொந்த தேவைக்கு பயன்படுத்திய கேஷியர்
ADDED : ஜூலை 22, 2025 01:10 AM

மதுரை: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தினமும் கிடைக்கும் வருவாயில் இருந்து குறிப்பிட்ட தொகையை தனது தேவைக்கு பயன்படுத்திய அலுவலக கேஷியர் ஜெயராமனிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இக்கோயில் நிர்வாகத்தின் கீழ் ராக்காயி அம்மன் கோயில், சோலைமலை முருகன் கோயில்கள் உள்ளன.கள்ளழகர் கோயில் பிரசாதமான தோசை தினமும் ஆயிரக்கணக்கில் விற்கப்படுகிறது. தவிர நெய் தீபமும் அதிகளவில் விற்கப்படுகிறது.கோயில் செலவுகள், ஊழியர்களுக்கு சம்பளம் போக நிர்வாகத்திற்கு இதன்மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கோயிலுக்கு ரூ.5.70 கோடி வருவாய் கிடைத்தது. செலவு ரூ.4.48 கோடி போக, மீதி ரூ.1.22 கோடி லாபமாக நிர்வாகத்திற்கு கிடைத்தது.
பிரசாத ஸ்டால், முடிகாணிக்கை, நெய் தீபம் உள்ளிட்ட கட்டணம் தொடர்பான வருவாய்களை அலுவலக கேஷியர் ஜெயராமன் என்பவர் கவனித்து வருகிறார்.தினமும் விற்பனைக்காக நிர்வாகம் கொடுக்கும் தோசை, நெய் தீபம் எண்ணிக்கைக்கேற்ப வருவாய் கிடைத்துள்ளதா என உறுதிசெய்வதும் இவரது பணி. வசூலாகும் தொகை இவரே பெற்று சரிபார்த்து வங்கியில் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வசூலாகும் தொகையில் குறிப்பிட்ட தொகையை தன் தேவைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அந்த தொகையை மறுநாள் வரவு வைத்து ஈடுசெய்துள்ளார்.
இப்படி இருமுறை தலா ரூ.10 ஆயிரம் எடுத்து பயன்படுத்தியது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ''பணம் கையாடல் எதுவும் நடக்கவில்லை. கோயில் வருவாயை தனது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார். விசாரணைக்கு பின் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

