ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு வழக்கு அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பு வழக்கு அதிக நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
ADDED : அக் 30, 2025 11:22 PM
சென்னை:பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு பணியில் சேர்ந்தவர்களின், ஜாதி சான்றிதழ் உண்மைத்தன்மை குறித்து, மாநில அளவிலான குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்.
இந்நிலையில், பணி ஓய்வு பெற்ற பிறகும், தங்கள் ஜாதி சான்றிதழ்கள் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, கோவையை சேர்ந்த குருசாமி, சோமசுந்தரம் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் பல்வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகள் பிறப்பித்திருப்பது, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
'எனவே, இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு பணியில் சேர்ந்தவர்களின், ஜாதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை குறித்து, அவர்கள் பணி ஓய்வு பெற்ற பின், மாநில அளவிலான குழு விசாரணை நடத்த முடியுமா என்பது குறித்து முடிவெடுக்க, இரண்டுக்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு மாற்றப்படுகிறது' என்றனர்.

