பஸ் இயக்கத்தில் ஜாதிய பாகுபாடு; எஸ்.சி.எஸ்.டி. ஆணையம் அதிரடி
பஸ் இயக்கத்தில் ஜாதிய பாகுபாடு; எஸ்.சி.எஸ்.டி. ஆணையம் அதிரடி
ADDED : ஆக 26, 2025 06:12 AM
சென்னை; 'கோவையில், ஜாதி பாகுபாடு காரணமாக, அரசு பஸ் இயக்கப்படுவதில்லை என்ற புகார் குறித்து விசாரித்து, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் குறையை தீர்க்க வேண்டும்', தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை கெம்பனுார் கிராமத்தில், தொண்டாமுத்துார் பேரூராட்சியின், மூன்றாவது மற்றும் நான்காவது வார்டு பகுதிகள் உள்ளன. இதில், மூன்றாவது வார்டில், கெம்பனுார் தெற்கு மற்றும் வடக்கு வீதி பகுதி உள்ளது. இங்கு, 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் அதிகமாக உள்ளனர்.
நான்காவது வார்டில், அண்ணா நகர் வடக்கு, தெற்கு வீதி உள்ளது. இப்பகுதியில், அருந்ததியர் சமுதாய மக்கள், 200 குடும்பத்தினர் உள்ளனர். இந்த கிராமத்திற்கு, 21, 21பி, 94ஏ, 64டி வழித்தடம் எண் கொண்ட, நான்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 21 வழித்தடம் எண் கொண்ட அரசு பஸ் மட்டும், ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள் பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பி செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்த செய்தி, பத்திரிகைகளில் வெளியானது.
இதை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர் செல்வகுமார், ஆணையத் தலைவரான நீதிபதி தமிழ்வாணன் கவனத்திற்கு கொண்டு சென்றார். இவ்விவகாரம் நேற்று முதல் அமர்வில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
விசாரணை முடிவில், கோவை கலெக்டர், கோவை அரசு போக்குவரத்துக்கழக மண்டலப் பொது மேலாளர் ஆகியோர், பத்திரிகைகளில் குறி ப்பிடப்பட்டிருக்கும், ஜாதிய ரீதியான பாகு பாடுகளை உடனடியாக விசாரித்து, பட்டியல் மற்றும் பழங்குடியினர் மக்களின் வேண்டுகோளின்படி, 500 மீட்டர் தொலைவிற்கு பஸ்களை கொண்டு சென்று, குறை தீர்க்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, செப்.24க்குள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, ஆணையம் உத்தர விட்டது.