ADDED : ஜன 02, 2024 07:13 AM

சென்னை: 'சேலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சார்பில் ஜாதி பெயர் குறிப்பிட்டு அனுப்பிய சம்மன் மீது விசாரணை நடத்த வேண்டும்' என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா, ராமநாயக்கன் பாளையம், காராமணி பகுதியை சேர்ந்தவர் சின்னையன் என்ற சின்னச்சாமி. இவர் தேவேந்திர குல வேளாளர் ஜாதியை சேர்ந்தவர்.
இவரது மகன்கள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோரும் விவசாயிகளாக உள்ளனர்.
மறைந்த சின்னசாமி விலைக்கு வாங்கிய ஆறரை ஏக்கர் நிலத்தை சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., பொறுப்பாளர் குணசேகரன் அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சித்துள்ளார்.
கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் நிலத்தை விற்க மறுத்தனர். அவர்கள் குணசேகரனிடம், ஒரு லட்சம் ரூபாயை பெற்றதாக போலி பத்திரம் தயாரித்து மிரட்டப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களுக்கு சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் 'ஹிந்து - பள்ளர்' என்ற ஜாதி் பெயரை குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளர் என்ற பெயர் தேவேந்திர குல வேளாளராக மாற்றப்பட்டு இரண்டு ஆண்டு ஆகிவிட்டது.
அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எதற்காக ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பியது என்பது குறித்தும் தேசிய அமலாக்கத்துறை இயக்குனரகம் விளக்கம் அளிக்க வேண்டும். ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படும்.
இது போன்ற விஷயங்களில் அமலாக்கத் துறை கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

