சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
சாதிவாரி கணக்கெடுப்பு உடனே நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
ADDED : பிப் 20, 2025 06:13 PM

சென்னை: தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று பா.ம.க., தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி, பா.ம.க., மற்றும் சமூகநீதிக் கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் பல்வேறு சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அன்புமணி பேசியதாவது:
சமூகநீதி நாளான இன்று நாங்கள் நடத்தும் அடையாள ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் தூங்குவது போல் நடிக்கும் முதல்வரை ஸ்டாலினை எழுப்புவதுதான். இதன் பிறகும் முதல்வர் விழிக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்துவோம். டைடல் பார்க் , மால்கள் என வெறும் கட்டடங்களை மட்டும் கட்டுவது வளர்ச்சியல்ல , மக்களை முன்னேறுவதுதான் உண்மையான வளர்ச்சி , அதுதான் சமூக நீதி.
பிகார் , தெலங்கானா போல தமிழ்நாட்டிலும் 2008 - இந்திய புள்ளியியல் சட்டப்படி சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே எடுக்க வேண்டும். ஊராட்சி அளவில் சர்வே எடுக்க ஊ.ம .தலைவருக்கு கூட அதிகாரம் உண்டு. சர்வே நடத்த அதிகாரம் இல்லை என்று கூறும் தமிழக முதலமைச்சரை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். இதுவரை திமுக சாதிவாரி கணக்கெடுப்பை 3 முறை நிறுத்தியுள்ளனர்.
திமுகவை தவிர அனைத்து கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்துள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 200 முதல் 300 கோடிதான் செலவாகும். சட்டமன்றத்தில் ஒரு முதல்வர் பொய் சொல்லி பார்த்தது உண்டா?
தற்போதைய முதல்வர் சட்டமன்றத்தில் இருமுறை பொய் சொல்லியுள்ளார், அதில் ஒன்று சாதிவாரி கணக்கெப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகராம் இல்லை என்பது. மற்ற மாநிலங்களில் எடுக்கின்றனரே, தமிழ்நாடு மட்டும் என்ன சீனாவில் இருக்கிறதா?
சாதிச் சண்டையை தூண்டிவிடுவது திமுகதான் , சிறிய பிரச்சனையை பெரிதாக்கி சாதிச்சண்டையை உருவாக்குகின்றனர் . சமூக நீதி என்பது எங்கள் ரத்தத்தில் ஊறியது , திமுக போல நாங்கள் வெறுமனே சமூகநீதி என பேசுபவர்கள் அல்ல. இந்த போராட்டம் கூட்டணி அரசியலுக்கானது அல்ல , ஆனால் பிற்காலத்தில் நாங்கள் எப்படி வருவோம் என தெரியாது.
இவ்வாறு அன்புமணி பேசினார்

