ADDED : அக் 02, 2024 01:46 AM

சென்னை:சென்னை தேனாம்பேட்டையில், நேற்று பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பாதுகாப்பு கணக்குகள் துறையின், 277ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற, முன்னாள் முப்படை வீரர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பின், அவர் பேசியதாவது:
முன்பெல்லாம், 'சீன் ஆப் கிரைம்' என, குற்ற நிகழ்விடம் இருக்கும். சைபர் குற்றங்கள் அப்படி அல்ல. ஒரு ஸ்மார்ட் போன், கணினி இருந்தால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தும் சைபர் குற்றங்களில் ஈடுபட முடியும்.
சைபர் குற்றவாளிகளை கைது செய்வதும் சவாலாக உள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் 'சைபர்' குற்றவாளிகள், ஓய்வூதியதாரர்களை தான் முதலில் குறி வைக்கின்றனர்.
அவர்கள் ஓய்வூதியதாரர்களின் கவனக்குறைவை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் தான், 99 சதவீதம் சைபர் குற்றங்கள் நடக்கின்றன.
வங்கிகளின் தரவுகளை கையாள, தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தப்படுவதாலும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் திருடப்படுவதாக தெரியவந்துள்ளது. அதை தடுப்பது பற்றி, வங்கி அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வூதியம் பெற 'வாட்ஸாப்' எண்
ராணுவ வீரர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, பிரத்யேகமாக, 88073 80165 என்ற வாட்ஸாப் எண் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த எண்ணுக்கு, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்களின் இறப்பு சான்றிதழ் களை அனுப்பினால் போதும். எங்கள் அலுவலக ஊழியர்கள், ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வர். 48 மணி நேரத்திற்குள் ஓய்வூதியம் வழங்கப்படும். அதேபோல, 2012க்கு முன், ராணுவ வீரர்களின் வாரிசுகள், திருமணமாகாத மகள் மற்றும் மாற்றுத்திறனாளியாக இருந்தால், ஓய்வூதியம் பெற முடியாத நிலை இருந்தது. அந்த நிலை மாறி விட்டது. அவர்களும் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.
- டி.ஜெயசீலன்
பாதுகாப்பு கணக்குகள் துறை கட்டுப்பாட்டாளர், சென்னை